நிறுவனர் - தலைவர்  டாக்டர் நல்ல பழனிசாமி

டாக்டர் நல்ல பழனிசாமி சிறந்த மருத்துவர், கல்வியாளர், சமூக ஆர்வலர், தலைசிறந்த தமிழ்ப் பற்றாளர். தமிழகத்தின் தொழில் நகரான கோவை மாநகரில் கோவை மெடிகல் சென்டர் மற்றும் மருத்துவ மையம் என்னும் பல்துறை மருத்துவமனையைத் தொடங்கி கோவைக்கு மருத்துவ மகுடம் சூட்டியவர். மருத்துவத் தொண்டோடு, டாக்டர் என்.ஜி.பி கல்விக் குழுமத்தினைத் தொடங்கிக் கல்விப் பணியையும் செய்து கொண்டிருப்பவர். அனுவாவி சுப்ரமணியர் சுவாமி திருக்கோயிலிலும் மருதமலை முருகன் திருக்கோயிலிலும் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்து அரும் திருப்பணிகளைச் செய்தவர்.

இவர்தம் பணிகளைப் பாராட்டி கோவை, பாரதியார் பல்கலைக் கழகம் 2011 ஆம் ஆண்டு இவருக்கு மதிப்புறு முனைவர் (Honorary D.Sc.) பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 2012-ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்புச் செய்தது. கோவை சுழற்சங்கம் பொதுத் தொண்டுக்கான தன்னுடைய உயரிய கேலக்ஸி கௌரவ விருதினை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் வளர்ச்சி/மேம்பாட்டுக்கென்று ஓர் அமைப்பை உருவாக்கி நற்பணிகள் ஆற்றிட வேண்டும் என்னும் இவருடைய தனியா ஆர்வத்தின் அடையாளமே தமிழ்ப் பண்பாட்டு மையம்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் - அறக்கட்டளை உறுப்பினர்

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர். கவிதை, இலக்கிய வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் படைப்புகளைக் கொடுத்து வருபவர். படைப்பும், பதிப்பும் இவரது தலையாய பணிகள்.

தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர். சாகித்திய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் (1993-1998), சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் (2008-2012) பணியாற்றியவர். தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருகின்றார்.

முனைவர் ப.க.பொன்னுசாமி - அறக்கட்டளை உறுப்பினர்

முனைவர் ப.க.பொன்னுசாமி இயல்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்த கல்வியாளர், அறிவியல் அறிஞர், இலக்கியப் படைப்பாளி. சென்னைப் பல்கலைகழகத்திலும், மதுரை காமராசர் பல்கலைகழகத்திலும், துணைவேந்தராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். தேசிய அளவில் மத்திய, மாநில கல்விக் குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்தவர்.

தமிழியல், அறிவியல், கல்விப் பற்றிப் பல நூல்களைப் படைத்தவர். கொங்கு மண் சார்ந்த மக்களின் வாழ்வியல் கூறுகளைப் படுகளம் என்னும் தம்முடைய புதினத்தின் வழிப் பதிவு செய்தவர். மக்களின் வாழ்வியல் விழுமியங்களைச் சிறுகதைகளாகவும் மிளிரச் செய்பவர். நெடுஞ்சாலை விளக்குகள் என்னும் தம் அண்மைப் புதினத்தின் வழி ஆராய்ச்சியுலக அனுபவங்களை ஆழமாகச் சித்திரித்தவர். பொன் நாவரசு அறக்கட்டளையை நிறுவி, சமுக, கல்விப் பணிகளை மேற்கொண்டு வருபவர். தமிழக அரசின் பல்கலைகழக நல்லாசிரியர் விருது பெற்றவர்.